Wednesday, December 8, 2010

சின்ன வயசில

சின்ன வயசில நான் நான் வளர்ந்த ஊருக்கு வராமாலே இருந்திருக்கலாம். நான் வளர்ந்த ஊருக்கு வந்த உடனே வேற ஊருக்குப் போயிருந்திருக்கலாம். நான் படிச்ச ஸ்கூலில படிக்காமலே போயிருந்திருக்கலாம்.

இது இப்படி நடந்திருந்தா அது அப்படி நடந்திருந்தா எது எப்படி நடந்திருக்கும்ன்னு யோசிக்கறது என்ன ஒரு முட்டாள்தனம் தான் இல்லையா? இந்த மாதிரி யோசிக்கறதும் புண் பட்ட மனசைப் புகை விட்டு ஆத்தறேன்னு சொல்றதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை :-). பல சமயம் இதைக் கேட்டு சிரிச்சிருந்தாலும், முட்டாள்தனம் நினைச்சாலும் புண் பட்ட மனசுக்கு மட்டும் புரியற சிதம்பர ரகசியம் இதுன்னு நினைச்சதும் உண்டு. இதும் அது போலத்தான்னு நினைக்கறேன்.

இப்படி சின்னச் சின்ன விஷயம் கொஞ்சம் கொஞ்சம் மாறி இருந்தாக் கூட உன்னைப் பார்க்காமலே போயிருந்திருக்கலாம். உன்னைப் பார்க்காம இருந்திருந்தா என்ன? வாழ்க்கை என்ன சினிமாவா? உன்னைப் பார்க்காம போயிருந்தா என் வாழ்க்கையே மாறி இருந்திருக்குமுன்னு டயலாக் அடிக்க. இப்ப கொட்டுற குப்பையைத்தான் அப்பவும் கொட்டீட்டு இருந்திருப்பேன்.

உன்னைப் பார்த்ததாலயா அழகான பொண்ணுகளோட நேருக்கு நேர் பார்க்கக் கூட தைரியம் கூட இல்லாம போச்சு? இல்லை உன்னைப் பார்த்ததாலயா பிடிச்ச பொண்களோட பேசக் கூட தைரியம் இல்லாம போச்சு?

உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் என்னோட முக்கியத்துவம் இல்லாத வாழ்க்கை முக்கியத்துவம் இல்லாமலேயே தான் இருந்திருக்கும். ஒண்ணும் பெரிசா மாறி இருக்கப் போறதில்லை?

கன்னக் குழியோட இருக்கற பொண்ணா இல்லாட்டியும் கன்னக் குழி இல்லாத எதோ ஒரு பொண்ணை எந்த ஸ்கூலுல படிச்சிருந்தாலும் பிடிச்சிருக்கத்தான் போகுது. அறியாப் பருவத்தில புரியா உணர்வு கொள்றதுங்கறது மனுஷன் குரங்கில இருந்து பரிணாம வளர்ச்சி அடையறதுக்கு முன்னாடியே பரிணாம வளர்ச்சி அடைஞ்சிருக்கணும்.

அறியாப் பருவத்து புரியா உணர்வு கூர்மையான மூக்கு கொண்ட பொண்ணு மேல ஏற்பட்டதாலயா படிச்ச ஸ்கூலை விட்டு வேற ஸ்கூல் போன 2 வருசத்துக்கு தொடர்ந்தது? கண்டிப்பா இல்லை அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே. அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை.

எத்தனை அழகான பொண்ணுங்களைப் பார்த்து தடுமாறினாலும் என் கதைன்னு எப்போ சொன்னாலும் உன் பேரை மட்டும் ஏன் சேர்த்தி சொல்லுறேன்? எனக்குன்னு கதைன்னு ஒண்ணும் இல்லாட்டிக் கூட எனக்குன்னு ஒரு கதை இருந்தா அது உன்னோட மட்டும் தான் இருக்கணும்ன்னு ஒண்ணுமில்லாத அதையே கதையா சொல்லத் தோணுது. ஆனாலும் உன்னைப் பார்க்காம போயிருந்தா கதை சொல்லி இருக்க மாட்டேனா சொன்னாப் அது பொய். அப்படீன்னா நீ இல்லாம போயிருந்தாலும் கதைன்னா கதாபாத்திரம் கண்டிப்பா இருக்கத்தான் போகுது. அப்படீன்னா உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் என்ன பெரிசா வித்தியாசம் இருந்திருக்கப் போகுது?

பேனான்னு ஒண்ணு கைல கிடைச்சா எதையாவது கிறிக்கீட்டே இருக்கற என்னோட பழக்கத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? உன் பேரை அன்னிச்சையாக் கிறுக்காம இருந்திருந்தா வேற எதையாவது கிறிக்கீட்டுத் தான் இருந்திருப்பேன். உன்னைப் பார்க்காமப் போயிருந்தாலும் இதிலயும் பெரிசா வித்தியாசம் இருந்திருக்கப் போறதில்லை.

ஆழியார் அறிவுத் திருக்கோயில் பஸ் பயணம், எண்ட்ரண்ஸ் எழுதப் போன பஸ் பயணம், நீ என்னை புத்திசாலின்னு உங்க வீட்டுல சொன்னதா எங்கம்மா எங்கிட்ட சொன்னது, monk who sold ferrari புஸ்தகத்தைப் பத்தி சுவாரஸ்யமா ரெண்டு மணி நேரம் பேசின போன் கால், சேர்ந்து பார்த்த சினிமா, வீட்டுல டிராப் பண்ணின பைக் பயணம், வேலைப் பார்க்காம சாட் பண்ணின நாட்கள் இப்படி வாழ்க்கை முழுக்க மறக்க முடியாத நினைவுகள் பலதுல நீ இருக்குது உண்மைதான். உன்னைப் பார்க்காம போயிருந்தா இதுக்கு பதிலா வேற நினைவுகள் இருக்காம போயிருக்கும்ன்னு என்னை நானே ஏமாதிக்க முடியாது கண்டிப்பா வேற சில நினைவுகள் இருந்திருக்கும் அது தான் உண்மை.

உண்மை என்னான்னா உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் பெண்கள் கிட்ட பேசற தயக்கம் கொள்கிற, காதல் பத்தி கனவாப் பேசித் சுத்துற, நடைமுறைக்கு கொஞ்சமும் ஒத்து வராத கற்பனைகள் கொண்ட நான் நானாகவேதான் இருந்திருப்பேன். இதில் இருந்து மாறி அப்படி இருந்திருப்பேன் அப்படி இருந்திருப்பேன்னு சொன்னா அது கண்டிப்பா உண்மை இல்லை.

இதை எல்லாம் ஒத்துக் கொள்கிற முடிந்த என்னால, உன்னைப் பார்க்காமலே இருந்திருந்தாலும் என்னோட அடி மனசில உன்னைத் தான் காதலிச்சுட்டி இருந்திருப்பேன்ங்கற அந்த சிந்தனையை மட்டும் மறுக்கவோ இல்லை அப்படி எல்லாம் இல்லைன்னு மாத்தி யோசிக்க மட்டும் முடியல.

No comments:

Post a Comment